
சுபாங் ஜெயா, ஜூலை 7 – நேற்று, சுபாங் ஜெயா ஜாலான் SS14/1 இல் உள்ள ஒரு உணவகத்தின் முன் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கும் போது, வாகன ஓட்டுநர் தற்செயலாக எண்ணெய்யை மிதித்ததால் அந்த உணவகத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
புரோட்டான் கார் முன்னோக்கி வந்து வளாகத்தின் முன்புறமிருந்த கண்ணாடி தடுப்புகளை மோதி, உணவகத்திற்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதென்று சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மமட், கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில், யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றாலும் ஓட்டுநர் தனது வாக்குமூலத்தை காவல்துறையினரிடம் தானே வழங்க முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓட்டுனருக்கு 4,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை அபராதமும், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்படும் வாய்ப்பும் அதிகமுள்ளது என்று வான் அஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.