
ரானாவ், ஜூலை 11 – இன்று அதிகாலை, கினாபாலு சிகரத்தில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கினாபாலு மலையின் ‘சயாத் -சயாத்’ சோதனைச் சாவடிப் பகுதியிலிருந்த 155 மலை ஏறிகளும் இந்த வலுவான நீர் ஓட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து தற்போது பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.
சபா பூங்கா அறங்காவலர் வாரிய நிர்வாகத்தின் அறிக்கையின்படி, சிகரத்தில் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து 7 கிலோ மீட்டர் தூரம் வரை பாதையைக் கடந்துள்ளது.
சபா பூங்காக்கள் (TTS) தேடல் மற்றும் மீட்பு (SAR) குழுவினர்களின் வழிகாட்டுதலில், உடனடி கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு பாதை பாதுகாப்பானதாக இருந்தபோதும் அனைத்து மலை ஏறிகளும் வழங்கப்பட்ட பாதுகாப்பு கயிறுகளைப் பயன்படுத்தியதாக அறியப்படுகின்றது.
இதனிடையே இதுபோன்ற சூழ்நிலைகளில் மலையேறிகள் அமைதியாக இருக்கவும், மலை அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.