
கோலாலம்பூர், ஜூலை-12 – உருவ வழிபாடு மற்றும் ஒழுக்கக்கேடான சடங்குகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தன்முனைப்புத் தூண்டல் நிகழ்வு குறித்து, இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM-மும் சிலாங்கூர் இஸ்லாமிய அதிகாரத் தரப்பும் விசாரித்து வருகின்றன.
பொது மக்களின் கவலைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், விசாரணையில் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு முழுமையாக சரிபார்க்கப்படுவதை உறுதிச் செய்ய செயல்பட்டு வருவதாகவும் JAKIM தலைமை இயக்குநர் சிராஜுடின் சுஹாய்மி கூறினார்.
மலாய் பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட இந்த தன்முனைப்புத் தூண்டல் நிகழ்வில் சுமார் 50 பெண்கள் பங்கேற்றனர்.
கடந்தாண்டு செப்டம்பர் 27 முதல் 30 வரை ஷா ஆலாமில் அது நடைபெற்றுள்ளது.
இறுதி நாளில் ‘தொந்தரவான’ நிகழ்வுகள் நடந்ததாக ஒரு ஃபேஸ்புக் பயனர் கூறியதை அடுத்து இது பொது மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஒரு பெண் பேச்சாளர் உள்ளாடை மட்டுமே அணிந்து உள்ளே நுழைந்து, பின்னர் நிர்வாணமாக நடந்து, தனது குழு உறுப்பினர்களுடன் நடனமாடத் தொடங்கியதாக, வலைத்தளவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
பின்னர் பங்கேற்பாளர்களும் அதனைப் பின்பற்ற ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மர்மமான பானம் கொடுக்கப்பட்ட பிறகு பங்கேற்பாளர்களும் ஆடைகளை கழற்றினர்.
இது தவிர, “புனித குளியல்” மற்றும் “மறுபிறப்பு” என்ற பெயர்களில் நடத்தப்பட்ட சடங்குகளில் பங்கேற்கவும் பங்கேற்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முறையான புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகளிடம் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பயனர் மேலும் கூறினார்.
இந்நிலையால் இஸ்லாமிய போதனைகளிலிருந்து விலகும் அல்லது உள்ளூர் கலாச்சார விதிமுறைகளுடன் மோதும் போதனைகள் அல்லது வாழ்க்கை முறைகளால் பாதிக்கப்பட வேண்டாம் என்று பொது மக்களை, குறிப்பாக முஸ்லிம்களைசிராஜுடின் வலியுறுத்தியுனார்.
இதுபோன்ற சம்பவங்கள் திறம்பட தீர்க்கப்படுவதை உறுதிச் செய்ய, சந்தேகத்திற்கிடமான அல்லது பொருத்தமற்ற செயல்பாடுகளைப் புகாரளிப்பதன் மூலம் மத அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.