
செர்டாங் – ஜூலை 16 – நேற்றிரவு, ஸ்ரீ கெம்பாங்கான் புத்ரா பெர்மாய் செலேசா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோஹிங்கியா இனத்தவரைக் குறி வைத்து, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 496 சட்டவிரோத குடியேறிகள் (PATI) வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த குடியிருப்பு பகுதிகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஆன்லைன் சூதாட்ட செயல்முறைகளும் இந்த நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த சோதனையில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை, சுபாங் ஜெயா ஊராட்சி மன்றம் (MBSJ), மலேசிய காவல்துறையினர் (PDRM), மலேசிய பாதுகாப்புப் படை (APM) மற்றும் தேசிய பதிவுத் துறை (JPN) ஆகியவற்றைச் சேர்ந்த 217 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தோனேசியா, மியன்மார், வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா நாட்டைச் சார்ந்தவர்கள் என்று குடிநுழைவுத் துறை துணை இயக்குநர் ஜெனரல் ஜாஃப்ரி எம்போக் தாஹா கூறியுள்ளார்.
இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் குடிநுழைவுத் துறை டிப்போவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் இந்த வழக்கு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்றும் அறியப்படுகின்றது.