
கோத்தாபாரு, ஜூலை 17 – கிளந்தானில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைளுக்கு பசுக்கள் மற்றும் ஆடுகளை பயன்படுத்தும் சாத்தியத்தை போலீசார் நிராகரிக்கவில்லை. அந்த பிராணிகளில் முதுகில் போதைப் பொருள் மறைத்துவைக்கப்பட்டு தாய்லாந்திலிருந்து கடத்தப்படும் தகவலை தாங்கள் அறிந்துள்ளதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப்,( Datuk Mohd Yusoff) தெரிவித்தார். இந்த வியூகம் பயன்படுத்தப்படுவதாக தொடக்கக் கட்டமாக பெறப்பட்ட இந்த தகவல் பல மாதங்களுக்கு முன்பு கிடைத்ததாக அவர் கூறினார்.
தாய்லாந்தில் இருந்து இங்கு கொண்டு வரப்படும் பசுக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பே தனிமைப்படுத்தப்படும் என்றும், பசுவின் உரிமையாளர் பிராணிகளுக்கு உணவளிப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே அந்த சூழ்நிலையின் அடிப்படையில், மாடுகள் மற்றும் ஆடுகளின் முதுகுகளில் போதைப்பொருள் மறைக்கப்பட்டு இங்கு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் நிராகரிக்கவில்லை.
பசுவின் உரிமையாளர் ஒரு இடைத்தரகராக மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளையும் திட்டமிட்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக முகமட் யூசோப் தெரிவித்தார். எனவே, இதனை தடுப்பதற்கான உளவு நடவடிக்கை அதிகரிப்பதோடு , கால்நடை சேவைகள் துறையுடன் ஒத்துழைப்போம் என்றும் முகமட் யூசோப் கூறினார்.