
புத்ராஜெயா, ஜூலை-18- மலேசியப் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 விழுக்காடாக பதிவாகுமென, ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் அது 4.4 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் வலுவான உள்நாட்டு தேவையால் இந்த வளர்ச்சி உந்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மலேசிய புள்ளிவிவரத் துறையான DOSM தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வளர்ச்சி வேகம் நீடித்ததால், ஜூன் மாதத்திலும் வலுவான செயல்திறன் எதிர்பார்க்கப்படுவதாக, இன்று வெளியிட்ட அறிக்கையில், DOSM கூறியது.
பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு, பள்ளி விடுமுறைகள் மற்றும் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் உள்ளிட்ட பருவகால செலவினங்களின் தாக்கத்தால், உள்நாட்டு பயனீடு அதிகரித்து முக்கிய உந்துதலாக இருந்தது.
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்க விகிதங்களின் சரிவால், ஒரு நிலையான தொழிலாளர் சந்தை உந்தப்பட்டு, குடும்பங்களின் செலவினங்கள் வலுப்பட்டதாக, தேசியத் தலைமை புள்ளிவிவரவியலாளர் டத்தோ ஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் (Mohd Uzir Mahidin) கூறினார்.
இது தவிர, SARA எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவி, STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவி போன்ற பண உதவித் திட்டங்கள், இந்த காலாண்டு முழுவதும் வீட்டுச் செலவினங்களைப் பராமரிக்க பங்களித்தது என்றார் அவர்.
இவ்வேளையில், ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டின் முதல் பாதியில் பொருளாதாரம் மிதமான அளவில் 4.4 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுச் செய்யுமென்றும் கணிக்கப்பட்டுள்ளது.