
கோலாலம்பூர், ஜூலை-19- பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில் 2 விபச்சார விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரச் சோதனைகளில், 21 பேர் கைதாகியுள்ளனர்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வியாழக்கிழமை மாலை புக்கிட் அமான் போலீஸ் குழு, ஒரு ஹோட்டலையும் அடுக்குமாடி வீட்டையும் சோதனையிட்டது.
அதில் 3 உள்நாட்டினர் உட்பட 21 பேர் சிக்கினர். அவர்களில், விலைமாதர்களின் ‘பாதுகாவலராக’ இருந்து வந்த 44 வயது உள்ளூர் ஆடவரும் அடங்குவார்.
ஏனையோரில் இருவர் உள்நாட்டுப் பெண்கள், 8 பேர் சீனப் பிரஜைகள், மூவர் மங்கோலியப் பெண்கள், மூவர் உஸ்பெகிஸ்தான் பெண்கள் ஆவர்.
ஜப்பான், ரஷ்யா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இணையத்தளத்தில், கவர்ச்சி ஆடைகள் அணிந்தபெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி பாலியல் சேவை விளம்பரம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ‘சேவைக்கும்’ 400 முதல் 1,000 ரிங்கிட் வரையிலான கட்டணங்கள் விலைமாதர்களிடமே நேரடியாக ஒப்படைக்கப்படுகின்றன.
அதிகாரிகளின் கண்களில் படாமலிருக்க, ஹோட்டலின் வெவ்வேறு தளங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்தும் விபச்சாரம் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.
கைதான 16 வெளிநாட்டுப் பெண்களுக்கு 14 நாட்கள் தடுப்புக்காவலும், 2 உள்ளூர் பெண்கள் உள்ளிட்ட நால்வருக்கு ஒரு நாள் தடுப்புக் காவலும் விதிக்கப்பட்டது.
உள்ளூர் ஆடவர் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.