
பாசிர் கூடாங், ஜூலை 19 – பாசிர் கூடாங் பகுதியில் இரட்டிப்பு லாபம் தருவதாக உறுதியளித்த பங்கு முதலீடு ஒன்றால் ஏமாற்றப்பட்ட நிறுவன மேலாளர் ஒருவர் 262,669 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
39 வயதான அப்பெண்மணியிடமிருந்து நேற்று ஸ்ரீ ஆலம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் புலனத்தில் பங்கு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து இந்த போலி முதலீட்டில் தான் ஏமாந்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 25 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் 262,669 ரிங்கிட் தொகையை பரிவர்த்தனை செய்துள்ளார்.
எந்தவித லாபமும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பெண் போலீசில் புகாரளித்துள்ளார் என்றும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்றும் அறிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் எப்போதும் கவனமாக இருக்கவும், பணம் செலுத்துவதற்கு முன்பு வழங்கப்படும் எந்தவொரு முதலீட்டையும் சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.