
ஃபிராங்க்ஃபர்ட் – ஜூலை-20 – ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மோட்டார் வாகனத் துறைக்கு மற்றோர் அடியாக, இன்னொரு சுற்று செலவுக் குறைப்புக்குத் தயாராகுமாறு, ஜெர்மன் sportscar கார் தயாரிப்பாளரான போர்ஷே (Porsche) தனது ஊழியர்களை எச்சரித்துள்ளது.
பிப்ரவரியில் அந்நிறுவனம் 1,900 ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் போர்ஷேவின் தாய் நிறுவனமான Volkswagen, ஏற்கனவே 2030-ஆம் ஆண்டுக்குள் 35,000 வேலைகளை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
“பல தசாப்தங்களாக எங்களைத் தாங்கிப் பிடித்த வணிக மாதிரி, நடப்புச் சூழலுக்கு இனியும் ஒத்துவராது” என போர்ஷே நிர்வாகம் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியது.
“நிறுவனத்தின் செயல்பாடுகள் குறுகிய காலத்திலேயே அதிரடி சரிவைச் சந்தித்துள்ளன; எனவே நீண்டகால எதிர்காலத்தை உறுதிச் செய்வதற்காக, இவ்வாண்டு பிற்பாதியில் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்படுகின்றன” என குறிப்பிட்டு எதனையும் சொல்லாமல் கடிதம் முடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில், உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வரும் கடுமையான போட்டி, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் விதித்த வரி மற்றும் யூரோவிற்கு எதிராக டாலர் பலவீனமடைதல் ஆகியவை போர்ஷேவை கடுமையாகப் பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குறைந்த தேவைக்கு மத்தியில் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிப்பதற்கான செலவும் நிறுவனத்தைப் பாதித்தது என, போர்ஷே முதலாளிகள் கூறுகின்றனர்.
சீனாவில் தொடர்ந்து சவாலான சந்தை நிலைமைகள் காணப்படுவதால், இந்த ஆண்டுக்கான அதன் இலாபம் மற்றும் விற்பனை கணிப்புகளை, ஏப்ரலிலேயே போர்ஷே குறைத்து விட்டது.
போர்ஷேவின் வாகன விநியோகம் இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவில் 28 விழுக்காடும் உலகளவில் 6 விழுக்காடும் குறைந்துள்ளது.