
கோலாலம்பூர், ஜூலை 23 – கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) அவசர சிகிச்சை துறை (JKT) முழுவதும் மின் மற்றும் மருத்துவ எரிவாயு அமைப்புகளைச் சோதனைச் செய்ய சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
நேற்று, கிள்ளான் அரசு மருத்துமனை அவசரச் சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட ஒரு சிறிய தீ விபத்தைத் தொடர்ந்து மாநில சுகாதார அமைச்சு இம்முடிவை எடுத்துள்ளது.
சம்பவத்தின் போது மொத்தம் 126 நோயாளிகளும் 62 ஊழியர்களும் JKT யில் இருந்ததாகவும், ஆனால் காயங்களும் உயிரிழப்புகளும் எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை அறிவித்துள்ளது.
இத்தீவிபத்தில் அவசர சிகிச்சை பிரிவின் 1 சதவீத பகுதி சேதமடைந்துள்ளதென்றும் அறியப்படுகின்றது.
HTAR பணியாளர்களின் விரைவான நடவடிக்கையால், குறுகிய காலத்தில் தீயைக் கட்டுப்படுத்தியிருந்தாலும், இதற்கான காரணத்தைக் கண்டறியவும் தற்காப்பு நடவடிக்கைளை மேற்கொள்வதிலும் அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.