
கோலாலம்பூர், ஜூலை-28- ஒற்றுமை அரசாங்கத்தில் பங்களிக்க எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படாவிட்டாலும், தேசிய முன்னணியில் நீடிப்பதே ம.இ.காவின் எதிர்காலத்திற்கு நல்லதாகும்.
எனவே, பாரிசானிலிருந்தோ ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியிலிருந்தோ ம.இ.கா வெளியேறக் கூடாது என, தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ம.இ.கா மிகச் சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்ட கட்சி என்பதோடு இந்தியர்களின் நலன் காக்கும் கட்சியாகும்.
எனவே இந்தியர்களின் ஆதரவு மீண்டும் அதன் பக்கம் திரும்பும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் ம.இ.காவின் பிரதிநிதித்துவம் நிச்சயமாக உயரும்.
அம்னோ, ம.சீ.ச , ம.இ.கா மூன்றும் தேசிய முன்னணிக்கு ‘மூவேந்தர்கள்’ போல. இந்த உறவு நீடிக்க வேண்டுமென துணைப் பிரதமருமான சாஹிட் சொன்னார்.
கட்சியின் எதிர்காலம் குறித்து வரும் அக்டோபர் பொதுப் பேரவைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் முன்னதாகக் கோடி காட்டியிருந்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் ஏதோ வேண்டாத விருந்தாளி போல ம.இ.கா நடத்தப்படுவதாகவும், அமைச்சரவை மட்டுமின்றி பிற அரசாங்க நிறுவனங்களில் கூட அக்கட்சிக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் சரவணன் குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படி மூன்றாண்டுகளாக நம்பி நம்பியே மோசம் போய்விட்டதாகவும், இனியும் ஏமாறத் தயாராக இல்லையென்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.