
வாஷிங்டன் – ஜூலை-28 – எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள் மலேசியா வந்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) அதனைத் தெரிவித்தார். ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது. புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில், இன்று 3 மணிக்கு அது தொடங்குகிறது.
தாய்லாந்து – கம்போடியா மோதல் கூடிய விரைவில் தீர்க்கப்பட்டு, இவ்வட்டாரத்தில் அமைதி மலர வேண்டுமென்பதே அமெரிக்காவின் விருப்பம்.
அதைத் தான் அதிபர் டோனல்ட் ட்ரம்பும் வலியுறுத்துவதாக ரூபியோ சொன்னார். தாய்லாந்து – கம்போடியா சண்டையில் இரு தரப்பிலும் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தவிர, எல்லைப் பகுதியிலிருந்து 200,000 பேர் வரை பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.