
ஜோகூர் பாரு, ஜூலை-29- ஸ்கூடாய் அருகே ஜாலான் ஜோகூர் பாரு-ஆயர் ஹீத்தாம் வழியாக பெர்லிங் மேம்பாலத்தின் அடியில் காங்ரீட் பீமில் (concrete beam) டிரேய்லர் லாரியின் சரக்குப் பகுதி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் காயமடைந்தனர்.
நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் நடந்த அச்சம்பவத்தில் ஒரு டிரேய்லர், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு MPV வாகனம் சம்பந்தப்பட்டன.
39 வயதான டிரேய்லர் ஓட்டுநர் கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, டிரேய்லரின் சுமை சுரங்கப்பாதை வழியாகச் செல்லும்போது பீம் கட்டமைப்பின் மீது மோதியது.
இதனால் சரக்குப் பகுதி கழன்று சாலையில் விழுந்ததாக, வட ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் பல்வீர் சிங் கூறினார்.
இதில் 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி காலிலும், பின்னால் அமர்ந்திருந்த 23 வயது நபர் வலது கையிலும் காயமடைந்தனர்.
டிரேய்லர் மற்றும் MPV ஓட்டுநர்களுக்கு காயமேதும் ஏற்படவில்லை.
கவனக்குறைவாகவும் ஆபத்தாகவும் வாகனமோட்டியதன் பேரில் டிரேய்லர் ஓட்டுநர் விசாரிக்கப்படுகிறார்.