
உத்தரபிரதேசம், ஜூலை-30- இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்தில் காயமடைந்த ஆடவர், தூங்கி வழிந்த மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழந்த சம்பவம் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
சுனில் எனும் அந்நபர் இரத்த வெள்ளத்தில், மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையிலிருந்த 2 ஜூனியர் மருத்துவர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அருகே சுனில் வலியால் துடிக்க, மேசையின் மீது கால்களை நீட்டியபடி மருத்துவர் ஒருவர் அயர்ந்துத் தூங்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.அவர்களை ஒரு பெண் எழுப்ப முயற்சி செய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை சுனில் உயிரிழந்தார். சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே சுனிலின் மரணத்திற்குக் காரணம் என குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் பொறுப்பிலிருந்த மருத்துவரோ, சுனிலுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், ஆனால் நோயாளியின் நிலை ஏற்கனவே மோசமாக இருந்ததாகவும் கூறிக்கொண்டார்.
இந்நிலையில் தூங்கி வழிந்த 2 ஜூனியர் மருத்துவர்களும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.