
கொரியா – ஆகஸ்ட் 1 – நேற்று, தென் கொரிய உணவக உரிமையாளர் ஒருவர், தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டியை வெப்பத்திலிருந்து காப்பாற்றுவதற்கு அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குளிர்சாதன பெட்டியினுள்ளே வெப்பநிலை மிகக் குறைவாக இல்லை என்பதை உறுதி செய்து நாயின் உரிமையாளரை விசாரித்தனர். இந்நிலையில், தனது நாய்க்குட்டி இருதய நோயால் அவதியுற்று வருவதாகவும் அதிக வெப்பம் அதற்கு ஆகாது என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தனது உணவகத்தில் உள்ள ஏர் கண்டிஷனர் பழுதடைந்ததால், குளிர்சாதன பெட்டியினுள்ளே ஒரு மெத்தையை வைத்து, அதனை சிறிது நேரம் உட்கார வைத்ததாக பதிலளித்துள்ளார்.