
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துன் மகாதீரின் மகன்கள் தங்களுடைய செல்வச் செழிப்பின் மூலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அண்மையில் கேட்டுள்ளார்.
ஆனால் இது ஒரு தனி குடும்பம் பற்றிய விவாதமாகவோ அல்லது ‘Turun Anwar’ பேரணியின் விளைவாக வந்த ஒன்றாகவோ இருக்கக் கூடாது என்கிறார், கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ல் சாந்தியாகோ.
உண்மையில் எல்லா பெரும்புள்ளிகளையும் பொறுப்பேற்க வைக்கும் ‘Unexplained Wealth Order’ அதாவது ‘விளக்கமுடியா சொத்துக்கள் சட்டம்’ இப்போது மலேசியாவுக்குத் தேவையாக உள்ளது. இது போன்ற சட்டத்தின் துணையுடன் பிரிட்டனில் ஒரே ஆண்டில் £62.9 மில்லியன் பவுண்ட் பணம் மீட்கப்பட்டது.
மலேசியாவும் இதையே பின்பற்றினால், திருடப்பட்ட சொத்துக்களை – ஆண்டுக்கணக்கில் நீதிமன்றங்களில் இழுத்தடிக்கத் தேவையில்லாமல், விரைந்து மீட்டெடுக்க முடியும்.
மலேசியா கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 277 பில்லியன் ரிங்கிட் பணத்தை ஊழலால் இழந்திருக்கிறது; அதாவது வருடத்துக்கு 55 பில்லியன் ரிங்கிட்டை மோசடிகள், ஒப்பந்த குளறுபடிகள், சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் மூலம் இழந்திருக்கிறது.
இந்தப் பணம் மட்டும் இருந்திருந்தால் பள்ளிகள், மருத்துவமனைகள், உணவு விநியோகம் போன்ற உதவிகளுக்குப் பயன்பட்டிருக்கும். நாம் பொறுமையை மட்டுமல்ல, பொது செல்வத்தை இழக்கிறோம் என்றார் அவர்.
சாதாரண மலேசியர்கள், உதவிகள், கடன், அல்லது கல்வி உபகாரச்சம்பளம் போன்றவற்றைப் பெறுவதற்கு, வருமானத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது.
ஆனால் மாளிகையில் வாழ்பவர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துகளில் புரள்பவர்களுக்கும் இந்நிலை உண்டா என்றால் அதற்கு பதிலில்லை.
இது அரசியல் வேற்றுமையல்ல — மாறாக நியாயம் பற்றியது.
எத்தனை அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் யாரும் விசாரணைக்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதற்கான சட்ட முறை வேண்டும். அதே சமயம், யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே unexplained wealth விசாரணை நடக்கக் கூடாது.
ஆச்சரியப்பட வைக்கும் வகையில் சொத்துகளைக் குவித்தோர்,
தங்களுடைய வருமானத்தைக் காட்டி சட்டபூர்வமாக அதனை நிரூபிக்க வேண்டியதைக் கட்டாயப்படுத்தும் ஒரு தெளிவான சட்டமே மலேசியாவுக்குத் தேவை.
இல்லையென்றால், நீதி வெறும் அரசியல் ஆயுதமாகவே இருக்குமென சார்ல்ஸ் நினைவுறுத்தினார்.