
செமோர் – ஆகஸ்ட்- 4 – ஈப்போ, செமோரில் (Chemor) தங்க வீடில்லாமல் வயதான ஓர் இந்திய தம்பதி காருக்குள் தங்கியிருப்பதாக வணக்கம் மலேசியா வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக, அதற்கு ஒரு தற்காலிகத் தீர்வு பிறந்துள்ளது.
செய்தியைப் பார்த்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தொகுதியான தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் மூத்த சிறப்பு அதிகாரி சுரேஷ் குமாரும் அவரின் குழுவினரும், உடனடியாக சம்பவம் இடம் விரைந்தனர்.
இருவரையும் அங்கிருந்து கூட்டிச் சென்று, தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர மகா மாரியம்மன் கோவிலில் தற்காலிகமாகத் தங்க வைத்துள்ளளர்.
பசியில் இருந்தவர்களுக்கு உண்ண உணவுகள் கொடுக்கப்பட்ட நிலையில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்த கணவர் இன்று டையலிசிஸ் சிகிச்சைக்குக் கொண்டுச் செல்லப்படுவதாக சுரேஷ் குமார் தெரிவித்தார்.
பிள்ளைகள் இல்லாத இத்தம்பதிக்கு உரிய உதவிகள் செய்யப்படுமென்றும் அவர் உறுதியளித்தார்.
ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான 55 வயது செல்வம் முனியாண்டி, அவரின் 56 வயது மனைவி லக்ஷ்மி நாராயணன் இருவரும், 2 வாரங்களாக Chemor Park, Taman Emas அருகே காருக்குள்ளேயே தங்கி, வருவோர் போவோரின் உதவியில் நாட்களைக் கடத்தி வருவதாக நேற்று வணக்கம் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது.
பாதுகாப்பில்லாமல் இருப்பதால், தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்துத் தருமாறு அத்தம்பதியர் கோரிக்கை விடுத்திருந்தனர். செய்தி வைரலாகி நேற்றே அவர்களுக்கு தற்காலிகத் தீர்வும் ஏற்பட்டுள்ளது.