Latestமலேசியா

ஞானராஜா வீட்டிலிருந்து 300,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

கோலாலம்பூர் – ஆக 8 – Lim Guan Eng லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையில் அரசு தரப்பின் முக்கிய சாட்சியான டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜாவின் வீட்டை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அவ்வீட்டிலிருந்து 300,000 மதிப்புள்ள விலையூர்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Shahrulnizam Ja’afar இன்று உறுதிப்படுத்தினார்.

அவ்வீட்டிலிருந்த ரகசிய கண்காணிப்பு கருவியில் பதிவான காணொளியை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை அடையாளம் காணும் நடவடிக்கையில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் அவ்வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

அந்த பொருட்களின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரிங்கிட் மதிப்புள்ளது என தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தனது கட்சிக்காரர் கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஞானராஜாவின் வழக்கறிஞர் டத்தோ R. T ராஜசேகரன் நேற்று கூறியிருந்தார்.

இந்த கொள்ளையின்போது ஒரு வர்த்தகருமான ஞானராஜாவை மிரட்டிய ஆடவர் கும்பல் ஒன்று ஹீரோவாக செயல்படாமல் வாயை மூடிக்கொண்டிருக்கும்படி அவரிடம் கூறியதையும் ராஜசேகரன் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இந்த கொள்ளைச் சம்பவத்தின்போது தனது வாயில் அடிபட்டதோடு ரத்தம் வழிந்ததாக செய்தியாளர்களிடம் ஞானராஜா கூறியிருந்தார்.

அதோடு வாயை திறக்காதே , என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா என்றும் கொள்ளையர்கள் கேட்டதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் திருடுவதை விட மிரட்டல் விடுப்பதில் அதிக கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவுக்கு அருகே உள்ள ஞானராஜாவின் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!