
குவாந்தான், ஆகஸ்ட் 12 – கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி, கெந்திங் ஹைலேண்ட்ஸிலுள்ள கேசினோ வளாகம் ஒன்றில் திருடப்பட்ட 2 மில்லியன் மதிப்பிலான 300 கேசினோ பண சில்லுகளில், 200 துண்டுகளை போலீசார் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நாளில் சந்தேக நபரிடமிருந்து இந்த சில்லுகளை வாங்கியதாக ஒப்புக்கொண்ட நிறுவன ஊழியர் ஒருவர், ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD) ஆஜராகியுள்ளார் என்பதனை பகாங் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
30 வயதுடைய அந்நபர், தனது இரண்டு ஊழியர்களை பயன்படுத்தி, சில்லுகளை பிணையாக வைத்து சந்தேக நபருக்கு 2 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தைக் கடனாக வழங்கியதாகவும், எந்தவித எழுத்துப்பூர்வ ஒப்பந்தமுமின்றி, கெந்திங் ஹைலேண்ட்ஸிலுள்ள ஒரு ஹோட்டல் லாபியில் கையால் பரிவர்த்தனை செய்யததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் அச்சந்தேக நபரை இன்டர்போல் (Interpol) உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று யஹாயா குறிப்பிட்டுள்ளார்.