
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13- B40 இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மித்ராவின் தோல்விக்கு, அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டுமென, பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ. சஞ்சீவன் வலியுறுத்தியுள்ளார்.
மித்ராவின் செயல்பாடு குறித்து நீண்ட காலமாகவே மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், மித்ரா அதன் அடிப்படை நோக்கத்தை அடைவதில் தோல்வியடைந்துள்ளதாக, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவே தற்போது கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இயலாமையால் ஏழை இந்திய மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் உள்ளன.
எனவே, மித்ரா உருவாக்கப்பட்டது முதல் இதுவரையிலான அதன் கணக்கு வழக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டுமென, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.
இலக்கிடப்பட்டவர்களுக்குப் போய் சேராத மித்ராவின் அனைத்துத் திட்டங்களின் பட்டியலும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
அதே சமயம் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும், வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்ய வேண்டுமென்றும் சஞ்சீவன் அறிக்கை வாயிலாக வலியுறுத்தினார்.