
கோத்தா திங்கி, ஆகஸ்ட்-17- தேசிய அரசியல் நீரோட்டத்தில் தங்களது எதிர்காலம் குறித்து, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் ம.இ.கா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதை, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
“மூடி மறைப்பதற்கு இதுவொன்றும் கள்ள உறவல்ல” என்றார் அவர். தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிக்காத்தானுடன் ஒத்துழைக்க வேண்டுமென கெடாவிலும் பினாங்கிலும் அடிமட்ட தொண்டர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.எனவே அதனை கட்சித் தலைமை தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
எது எப்படி இருப்பினும் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து அக்கட்சியே முடிவுச் செய்யும் என, கோத்தா திங்கியில் ஜோகூர் ம.இகாவின் 79-ஆவது பேராளார் மாநாட்டைத் தொடக்கி வைத்து பேசுகையில் விக்னேஸ்வரன் கூறினார்.
ம.இ.கா பலவீனம் அடைந்து விட்டதாக சிலர் பேசுகின்றனர்; அப்படி பலவீனமான எங்களைப் பற்றி தான் அனுதினமும் பேசுகிறார்கள்; இது தமக்குப் புரியவில்லை என அவர் கிண்டலாகக் கூறினார்.ம.இ.கா எப்போதும் அதன் அடிமட்ட தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் என்றார் அவர்.
எதிர்காலம் கருதி எந்த கட்சியுடனும் ம.இ.கா பேசும் என ஏற்கனவே விக்னேஸ்வரன் கூறியிருந்தார்; ஒருவேளை ம.இ.கா பெரிக்காத்தானில் இணைந்தால் வரவேற்போம் என அக்கூட்டணி தலைவர்கள் சிலரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.