
கோலாலம்பூர் – ஆகஸ்ட்- 20 – மலேசியக் கால்பந்து சங்கமான FAM-மின் முன்னாள் நிர்வாகச் செயற்குழு உறுப்பினர் டத்தோ கிறிஸ்டபர் ராஜ், WFS எனப்படும் அனைத்துலக கால்பந்து உச்சநிலை மாநாட்டின் ஆலோசக வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் அது நடப்புக்கு வந்துள்ளதாக, WFS அறிவித்தது. இதன் மூலம் மலேசியாவிலிருந்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது நபராக அவர் திகழ்கிறார்; இதற்கு முன் ஆசியக் கால்பந்து சங்கமான AFC-யின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ விண்ட்சர் ஜோன் (Windsor John) அப்பொறுப்புக்கு தேர்வாகியிருந்தார்.
இந்த WFS ஆனது, உலக அளவில் செல்வாக்குமிக்க கால்பந்து பிரமுகர்களை ஒன்றிணைக்கும் பிரசித்திப் பெற்ற உலக அமைப்பாகும்.
மலேசியக் கால்பந்து உலகின் நிர்வாக மற்றும் தொடர்புத் துறையில் மிகவும் மதிக்கப்படுபவராக வலம் வரும் கிறிஸ்டபர், தேசிய, வட்டார மற்றும் அனைத்துலக அளவில் 20 ஆண்டுகளாக தனது கால்பந்து வாழ்க்கையை கட்டமைத்தவர் ஆவார்.
தென் கிழக்காசியாவில் பிரசித்திப் பெற்ற விருதுகளை வென்ற விளையாட்டுத் தொடர்பு நிறுவனமான ShekhinahPR-ரின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிறிஸ்டபர், MFL எனப்படும் மலேசியக் கால்பந்து லீக்கின் இயக்குநர் வாரிய உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதே சமயம் அனைத்துலக அளவில், ஆசியக் கால்பந்து சம்மேளனமான AFC, அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA ஆகிய அமைப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் அவருக்குண்டு.