
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – சுதந்திர மலேசியாவின் வெற்றிகரமான 68 ஆண்டுகள் பயணமானது, தூரநோக்குமிக்க தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலால் மட்டுமின்றி, மக்களின் அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஒற்றுமையின் மூலம் சாத்தியமானது என்கிறார், கூட்டரசு பிரதேச கௌரவ ரேலா தொண்டூழிய கிளப்பின் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr கே.கே. சாய் (K.K.Chai).
நாட்டின் வளர்ச்சியை வழிநடத்துவதில் தேசியத் தலைமைத்துவம் மிக முக்கிய பங்கு வகித்தாலும், மலேசியர்களின் ஒன்றுபட்ட மனப்பாங்கே நாட்டின் முன்னேற்றத்தை நிலைநிறுத்துகிறது.
ஒரு நாடு எதிர்காலத்தில் செழிக்க வேண்டுமெனில், அதன் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றார் அவர்.
1957-இல் சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் “மெர்டேகா” எனப் பிரகடனப்படுத்திய ஸ்டேடியம் மெர்டேகாவுக்கும், தற்போது உலகின் இரண்டாவது உயரமான கட்டடமாக விளங்கும் *மெர்டேகா 118*க்கும் ரேலா கிளப் மேற்கொண்ட சிறப்பு வருகையின் போது கே.கே.சாய் அதனைத் தெரிவித்தார்.
அக்குழுவினரை, PNB Merdeka Ventures Sdn. Bhd தலைமை நிர்வாக அதிகாரி யாங் முலியா தெங்கு டத்தோ அப்துல் அசிஸ் வரவேற்றார்.
மேலும், மெர்டேகா 118 கட்டுமானமும் அதன் காட்சியும் குறித்த ஊக்கமளிக்கும் கதைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கிளப்பின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ மைக்கல் சோங் உட்பட சுமார் 30 பேரும் அதில் இடம் பெற்றிருந்தனர்.
இப்பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்ட கே.கே. சாய், இன்று மலேசியா அனுபவிக்கும் சுதந்திரம், முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் அமைதியின் அளவிட முடியாத மதிப்புகளையும் நினைவூட்டியதாக சொன்னார்.