
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – மலேசியாவில் குறை திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களில் வங்காளதேசிகளே பெரும்பான்மையினராக உள்ளனர்.
ஜூன் 30 வரையிலான குடிநுழைவுத் துறையின் தரவுகளின் படி, 803,332 வங்காளதேசிகள் PLKS எனப்படும் தற்காலிக வேலை அனுமதி பெர்மிட்டை வைத்திருப்பதாக, உள்துறை அமைச்சு கூறியது.
இவ்வெண்ணிக்கையானது ஒட்டுமொத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 37 விழுக்காடாகும்.
இவ்வேளையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதும், 2022-ஆம் ஆண்டில் 49,353 வங்காளதேச தொழிலாளர்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பின்னர், வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறைகளை அரசாங்கம் எளிதாக்கியதும், 2023-ல் 397,548 புதிய வங்காளதேச தொழிலாளர்கள் நாட்டுக்குள் நுழைந்தனர்.
அதே சமயம், PLKS பெர்மிட் முடிந்ததும் 2022-ல் 20,331 பேரும், 2023-ல் 23,065 பேரும் தத்தம் முதலாளிமார்களால் வங்காளதேசம் திருப்பி அனுப்பப்பட்டதாக, சைஃபுடின் மக்களவையில் தெரிவித்தார்.