
காஜாங், ஆகஸ்ட் 27 – காஜாங் ஜாலான் புக்கிட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி விநாயகர் ஆலயத்தில் 23-ஆம் ஆண்டு மகா விநாயகர் சதுர்த்தி விழா பக்தி பேரொளியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், கும்ப பூஜை, விநாயகர் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம், பால் அபிஷேகம், மகா பூர்ணாஹுதி, கும்ப நீர் அபிஷேகம் மற்றும் தீபாரதனை போன்ற விநாயக பெருமானுக்கு உகந்த அனைத்து பூஜைகளும் நேர்த்தியாக நடைபெற்றன.
மேலும் நண்பகலில் விநாயகர் சுவாமிக்கு விசேஷ பூஜை மற்றும் மங்கள தீபாரதனைகள் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பக்த மெய்யன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை பக்தர்கள் புடைசூழ அன்னை மகனாம் விநாயக மூர்த்தி பெருமான் ரத ஊர்வலத்தில் நகரை வலம் வந்து பக்தி நிறைந்த காட்சியை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி உச்சி மலை விநாயகர் ஆலயத்தின் பெருமைமிகு ஆன்மிகப் பாரம்பரியம் எனவும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று அருள் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் ஆலயத் தலைவர் டத்தோ ஆ. கணேசன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் சரவணன் கருப்பையா ஆகியோர் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆலய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஆதரவும், பக்தர்களின் ஒற்றுமையும் மிகுந்த பலமாக உள்ளது என அவ்விருவரும் தெரிவித்தனர்.
இவ்விழா, ஆலயத் தலைவர் தொண்டர் மணி டத்தோ ஆ. கணேசன் தலைமையிலும், தலைமை குருக்கள் சிவ ஸ்ரீ நந்தகுமார் குருக்கள், துணைக் குருக்கள் சிவ ஸ்ரீ ஆ. செந்தில் குருக்கள் மற்றும் உதவிக் குருக்கள் ஆகியோரின் வழிநடத்தலுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த கோலாகல விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்தில் சிறப்பு பிரமுகர்களான பாங்கி கெஅடிலான் தொகுதித் தலைவர் லிம் கிம் எங், காஜாங் சட்டமன்ற உறுப்பினர் DAVID CHEONG, பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் Syahredzan Johanனின் சிறப்பு அதிகாரி தாமரை ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுடன் இணைந்து வழிபட்டனர்.
மலேசிய இந்து சங்க காஜாங் வட்டார பொறுப்பாளர்கள், நன்கொடையாளர்கள், ஆலய செயலவை உறுப்பினர்கள், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழாவை மேலும் சிறப்பித்தனர்.