
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – Dataran Putrajayaவில் 2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்ட நிகழ்வின் ஒத்திகையை கண்காணிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அங்கு திடீர் வருகை புரிந்தார். காலை 8.30 மணியளவில் வந்த அன்வார், இந்த கொண்டாட்டத்தின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் மனித கிராபிக்ஸ் செயல்திறன் பகுதியைப் பார்த்ததோடு , ஒத்திகைக்கு வந்த பார்வையாளர்களையும் சந்தித்து நேரத்தை செலவிட்டார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் முழு நிகழ்விற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அவருடன் காலை 7.30 மணிக்கு முன்னதாகவே வந்த தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பாட்சில் ( Fahmi Fadzil), போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளின் பங்கேற்பு உள்ளிட்ட பிரதான மேடையில் ஒத்திகையின் சுமூகமான நடவடிக்கைகளை கண்காணித்தார். இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டத்தில் 14,000த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் 78 வாகனங்கள், ஏழு அலங்கார கார்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், அத்துடன் ‘நெகராகு’ பாடல் இசைக்கப்படும் போது 14 பீரங்கி குண்டுகள் முழங்கப்படும்.