
பியோங்யாங், செப்டம்பர்-4 – வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) எங்கு சென்றாலும், தன்னுடைய தனிப்பட்ட கழிப்பறையை உடன் எடுத்துச் செல்வது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவில் அண்மையில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் போதும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் ஒரே மேடையில் தோன்றிய போதும், குண்டு துளைக்காத இரயிலில் பயணித்த கிம், வழக்கம்போல தனிப்பட்ட கழிப்பறையை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவொன்றும் புதிதல்ல…
2018-ஆம் ஆண்டு, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஹானோயில் நடைபெற்ற அனைத்துலக உச்ச நிலை மாநாடுகளுக்கும் கிம் தனது கழிப்பிடத்தைச் உடன் கொண்டுச் சென்றுள்ளார்.
அவர் பயன்படுத்தும் கரண்டி, அறைகள் முதல் சிகரெட் சாம்பல் வரை அனைத்துமே பாதுகாப்புடன் கையாளப்படுவதும் வழக்கம்.
ஏன் இத்தனை முன்னெச்சரிக்கை என்றால்…அவரது கழிவுகள் கூட வெளியில் கசியக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னேற்பாடுகள் என உளவுத்துறைகள் கூறுகின்றன.
அதாவது Kim Jong Un-னின் மலக் கழிவுகளை ஆய்வு செய்தால் அவரின் உடல்நிலை பற்றிய முக்கிய தகவல்கள் தெரிந்துவிடும்.
அப்படி நடக்கக் கூடாது என்பதற்காகவே, உள்நாடோ வெளிநாடோ… போகுமிடமெல்லாம், அவர் கழிப்பறையை உடன் கொண்டுசெல்கிறார்.
வட கொரியாவில், தலைவரின் உடல்நிலை குறித்த வதந்தி கூட ஆட்சியில் அசாதாரண அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடும் என்ற ஓர் ஐயம் உள்ளது.
அதுவும் சர்வ வல்லமை பொருந்திய ஆட்சியாளராக வலம் வரும் அவரின் உடல்நிலை, நேரடியாக ஆட்சியின் நிலைத்தன்மை மீதும் தாக்கம் கொண்டுள்ளது.
அதனால் தான், முடி, உமிழ்நீர், கழிவு என எந்த தடயமும் வெளியில் கசியாதபடி இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
வட கொரியாவில், ஒரு சாதாரணக் கழிப்பிடம் கூட, தேசிய பாதுகாப்பின் முக்கிய கருவியாக மாறியுள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.