
காஜாங், செப்டம்பர்-4 – Cheras Batu 9-னில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவன் நாய் கடித்து காயமடைந்துள்ளான்.
நேற்று புதன்கிழமை இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதாக, காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
மாலை 6.30 மணியளவில் அச்சிறுவன் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் தோன்றி அவனைத் தாக்கியதாக போலீஸ் புகாரில் கூறப்பட்டது.
பொது மக்கள் விரைந்து தலையிட்டு நாயை விரட்டியடித்தனர் என்றார் அவர்.
சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு சிறார்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவனது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து, நகராட்சி மன்றத்தின் அமுலாக்கக் குழு சம்பவ இடம் சென்று அந்நாயை வெற்றிகரமாகப் பிடித்தது.
எனினும், அது செல்லப்பிராணியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக நாஸ்ரோன் கூறினார்.