
போர்டிக்சன், செப்டம்பர்-5 – போர்டிக்சன், சுங்கை லிங்கியில் கார் உருண்டோடி ஆற்றில் மூழ்கியதில் 2 பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், கொலை விசாரணைக்காகக் கைதாகியுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் வழங்கியதை அடுத்து, சந்தேகத்தின் பேரில் 46 வயது ஆடவரும் அவரின் 41 வயது மனைவியும் கைதாகினர்.
நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் Datuk Alzafny Ahmad அதனை உறுதிப்படுத்தினார்.
அதோடு அவ்வாடவருக்கு 16 பழையக் குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது; அவற்றில் 4 புகார்கள் இன்னமும் விசாரணையில் உள்ளன.
அம்மாது குற்றப்பதிவு எதனையும் கொண்டிருக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆற்றில் மூழ்கிய அவர்களின் காரும் 2022-ஆம் ஆண்டு ஜோகூர் நூசா பெஸ்தாரியில் திருடுபோனதாக புகார் செய்யப்பட்ட கார் என்ற அதிர்ச்சித் தகவலும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் கொலை விசாரணைக்காகத் தடுத்து வைக்க நீதிமன்ற உத்தரவு பெறப்படும் என Alzafny கூறினார்.
நேற்று காலை சுங்கை லிங்கி ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருண்டோடி ஆற்றில் மூழ்கியதில், காரினுள் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியும் அவளது 6 வயது தம்பியும் மாண்டனர்.
ஆனால் பெற்றோர் எப்படியோ உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.