
புத்ரா ஜெயா, செப் 10 – 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான தயாரிப்பு மற்றும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் முழு கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தொடர்பு அமைச்சரும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ பாமி பாட்ஷில் ( Fahmi Fadzil ) தெரிவித்தார்.
அதே வேளையில் திட்டமிட்ட கூட்டங்கள் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பரிசிலித்த விவகாரங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமைச்சர்கள் பல திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதையும் முன்னுரிமை அளிப்பதையும் உறுதி செய்வதோடு, சில வாரங்களில் அக்டோபர் 10 ஆம் தேதி பிரதமரால் சமர்ப்பிக்கப்படும் 2026 பட்ஜெட்டுக்கான தயாரிப்புகளையும் உறுதி செய்வதாகும்.
அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான தயாரிப்புகளுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சரவைக்கு பிந்திய செய்தியாளர் கூட்டத்தில் பாமி தெரிவித்தார்.
அடுத்த மாதம் கூட்டரசு தலைநகரில் நடைபெறும் ஆசியானின் 47 ஆவது உச்சநிலைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனப் பிரதமர் Li Qiang உட்பட பல முன்னணி தலைவர்கள் கலந்துகொள்வார்கள்