
காட்மண்டு, செப்டம்பர்-13 – ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நேப்பாள நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அதிபர் மாளிகையில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டதன் வழி, 73 வயது சுஷிலா அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரவாற்றைப் படைத்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடம் தீ வைக்கப்பட்டது, முன்னாள் பிரதமரின் மனைவி வீட்டில் தீயில் உயிரிழந்தது, அமைச்சர்கள் சாலையில் துரத்திச் சென்று தாக்கப்பட்டது என கடந்த ஒரு வாரமாக அந்தத் தெற்காசிய நாட்டில் வரலாறு காணாத வன்முறைக் காட்சிகள் அரங்கேறின.
தலைவிரித்தாடிய ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் GenZ இளம் தலைமுறையினர் கொதித்தெழுந்ததில், அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த மோதலில் 50 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இதனால் பிரதமர் பதவியிலிருந்து கே .பி. ஷர்மா ஒலி (KP Sharma Oli) ராஜினாமா செய்தார்.
இடைக்காலப் பிரதமராக சுஷிலாவைத் தேர்வுச் செய்யுமாறு GenZ ஆர்ப்பாட்டக்காரர்கள் வற்புறுத்தி வந்தனர்.
2016 – 2017 க்கு இடையில் நேப்பாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய சுஷிலா, பல இளம் நேப்பாள மக்களால் சமரசமற்ற நபராகக் கருதப்படுகிறார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில், ஊழலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததற்காக நற்பெயரைப் பெற்றவர் ஆவார்.
இதையடுத்து அதிபர் மாளிகை, இராணுவம் மற்றும் போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் சுஷிலாவையே தேர்வுச் செய்ய இணைக்கம் காணப்பட்டது.
சுஷிலா தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அடுத்தாண்டு மார்ச் வரையில் நாட்டை வழிநடத்தும்; மார்ச் 5-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



