
லூனாஸ், செப்டம்பர்-15 – ‘தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண’ தேசிய சிலம்பப் போட்டியை, அந்த ம.இ.கா தேசியத் தலைவர் கெடா, லூனாஸ், பாயா பெசாரில் நேற்று தொடக்கி வைத்தார்.
மலேசிய சிலம்பக் கழகத்தின் கெடா கிளை, MIED எனப்படும் மாஜூ மேம்பாட்டுக் கழகம், ம.இ.காவின் தேசிய விளையாட்டுக் குழு ஆகியவை இணைந்து அந்த 3-நாள் போட்டியை தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளன.
நேற்றைய திறப்பு விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் 30 பிரிவுகளில் போட்டிகளில் பங்கெடுத்தனர்.
இது வெறும் போட்டிக் களமாக இல்லாமல் சிலம்பாட்டக்காரர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதையும், இந்தியர்களின் இந்தப் பாரம்பரியத் தற்காப்புக் கலையின் பெருமையை உயர்த்துவதையும், தேசிய அளவில் விளையாட்டு உணர்வை ஊட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது.
அதோடு, தேசிய சிலம்ப அணிக்கான வீரர் – வீராங்கனைகளைத் தேடும் களமாகவும் இப்போட்டி விளங்குகிறது.
2026 சிலாங்கூர் சுக்மா போட்டிக்குத் தயாராகி வரும் மாநில சிலம்ப வீரர் – வீராங்கனைகளுக்கும் ஒரு சிறந்த பயிற்சிக் களமாக இப்போட்டி அமைந்துள்ளது.
சுமார் 150 பெற்றோர்களும் பொது மாக்களும் திரண்டு வந்து போட்டியாளர்களுக்கு ஊக்கமளித்தனர்.