
கோலாலாம்பூர், செப்டம்பர்-18 – சிங்கப்பூரில் மரண தண்டனையை நெருங்கி வரும் மலேசியர் P Pannir Selvam வழக்கில் அரசாங்கம் தலையிட வேண்டுமென, PKR கட்சியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Pandan உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, செத்தியவங்சா உறுப்பினர் Nik Nazmi Nik Ahmad, சுபாங் MP Wong Chen, செகாமாட் உறுப்பினர் R. யுனேஸ்வரன், சுங்கை சிப்புட் MP S.கேசவன் உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.
P Pannir செல்வத்தின் குடும்பம், அவரை பகடைக்காயாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மலேசிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூத்த உறுப்பினர்களை பற்றிய புதிய தகவல் குறித்து போலீஸில் புகாரளிக்க, சாட்சியாளர் ஒருவரை இணங்க வைத்திருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
மார்ச் மாதம் செய்யப்பட்ட அப்புகாரை போலீஸார் விரைவாக விசாரணை செய்து, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Saifuddin Nasution Ismail சிங்கப்பூர் அரசுக்கு P Pannir செல்வத்தின் தூக்குத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்த கோரிக்கை விடுக்க வேண்டுமென, இந்த 12 MPகளும் கோரியுள்ளனர்.
கூட்டறிக்கையில் அவர்கள் கையெழுத்திட்டும் உள்ளனர்.
51 கிராம் ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்திய வழக்கில் 2017-ஆம் ஆண்டு P Pannir செல்வத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடும், அதிபரிடம் பொது மன்னிப்புக்கான மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டன; அண்மையில் கூட, தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரிய அவரின் மனுவை சிங்கை மேல்முறையீடு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.