
திருவனந்தபுரம், செப்டம்பர்-20,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள த்வாரபாலகர் (Dwarapalaka) சிலைகளிலிருந்து தங்கம் காணாமல் போனதாகக் கூறப்படும் விவகாரத்தில், கவனமான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
2019-ஆம் ஆண்டு சிலைகளில் தங்கம் பூசப்பட்ட வெண்கலத் தகடுகள் அகற்றப்பட்ட போது அவை 42.8 கிலோ கிராம் எடையுடன் இருந்தன.
ஆனால், சென்னையில் தங்கம் பூசுவதற்காக அனுப்பிய போது, அவை வெறும் 38.2 கிலோ கிராம் எடையில் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 4.5 கிலோ தங்கம் குறைந்திருப்பது கவலைக்குரியதென நீதிமன்றம் குறிப்பிட்டது.
இது குறித்து உடனடியாக தகவல் அளிக்காத திருவிதாங்கூர் தேவஸ்தானத்தையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தவிர, இத்தகைய மதிப்புமிக்க பொருட்கள் சரியான நடைமுறைகள் இல்லாமல் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட விதத்தையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
இதனை முழுமையாக விசாரித்து 3 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.