
கோலாலம்பூர், செப்டம்பர் -24,
டோல் கட்டணத்தைக் காட்டாமல் தப்பிச் சென்ற பிக்கப் டிரக் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கண்டனத்தையும் நகைச்சுவைக் கருத்துக்களையும் பெற்று வருகின்றது.
அந்த வைரல் காணொளியில் கருப்பு நிற டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் ஒன்று, இடது புற Touch ‘n Go வழியில் நின்றபின், திடீரென வலப்புற SmartTAG பாதைக்குள் மாறிச் செல்லும் காட்சியைக் காண முடிந்தது.
மேலும் முன்புற வாகனம் நகர்ந்தவுடன், டிரக் வேகமாக பாய்ந்து, டோல் கதவு முழுமையாக இறங்குவதற்கு முன்பே தடையைத் தாண்டிச் சென்றது.
இச்சம்பவம் நடந்த இடம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சிலர் அது கோத்தா தாமன்சாரா டோல் பிளாசா அருகே நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தை கண்ட பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில் சட்டம், ஒழுங்கை மீறி இப்படிச் செயல்படுவது அநியாயமல்லாமல், மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து விளைவிக்கும் என்று கருத்துரைத்து வருகின்றனர்.
இன்னும் சிலர் நகைச்சுவையாக, இவ்வளவு பெரிய வண்டியை ஓட்டுகின்றார் ஆனால் இரண்டு ரிங்கிட் டோல் கட்டணத்தை தவிர்க்கின்றாரே என்று வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம், மலேசியாவின் டோல் வசூல் முறைகளின் பாதுகாப்பு மற்றும் நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடையே புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.