
கோலாலாம்பூர், செப்டம்பர்-26,
புற்றுநோய்க்கான கிமோதெரபி சிகிச்சைச் செலவை உள்ளடக்கும், குறைந்த கட்டணத்திலான மருத்துவ காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia சமூக நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
குறிப்பாக B40 மற்றும் M40 தரப்பினர் சிகிச்சைச் செலவில் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்த முயற்சி Perlindungan Tenang திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
தற்போது, புற்றுநோய் critical illness என வகைப்படுத்தப்பட்டு, ஒரே தடவையில் காப்பிட்டு பணம் வழங்கப்பட்டாலும், நீண்டகால சிகிச்சை செலவுக்கு அது போதவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியர்களில் 10 பேரில் ஒருவர், தனது வாழ்நாளில் புற்றுநோய்க்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் National Cancer Screening Program போன்ற திட்டங்கள் உதவினாலும், 3 மற்றும் 4-ஆம் நிலை நோயாளிகள் இன்னும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றார் அவர்.
எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புற்றுநோய் சிகிச்சைக்கான தனிக் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென, மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டுமென சிவகுமார் வலியுறுத்தினார்.