
பாலிங், செப்டம்பர்-26,
கெடா, குப்பாங், பாலிங்கைச் சேர்ந்த ஒரு மகள், தன் குடும்பத்திற்காக உறுதியுடன் கல்விப் பயணத்தை விடாமல் பின்தொடருகிறார்.
4 பிள்ளைகளில் மூத்தவரான ஸ்ரீ ஷாமினேஸ்வரி குமாரன், UniMAP எனப்படும் மலேசியப் பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக வணிகத் துறையில் கல்வி தொடங்க உள்ளார்.
8 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை, பகுதி நேரமாக பேரங்காடியில் வேலை செய்யும் தாய், tumor கட்டியால் அவதிப்படும் தம்பிக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நிலை என, இத்தனை சவால்களுக்கிடையே வளர்ந்தவர் தான் ஷாமினேஸ்வரி.
என்றாலும், அச்சவால்கள் அவரது உற்சாகத்தை தடுக்கவில்லை.
UPU வழியாக UniMAP-பில் மேற்கல்விப் பயில வாய்ப்புக் கிடைத்துள்ளது தமக்கும் குடும்பத்துக்கும் பெரிய ‘பாக்கியம்’ என அவர் நெகிழ்ந்தார்.
இந்நிலையில் Ziarah Kasih Bakal Pelajar Baharu திட்டத்தின் மூலம், UniMAP பல்கலைக் கழகம் அக்குடும்பத்துக்கு உதவி செய்து வருகிறது.
அவ்வகையில், Yayasan Perkasa Siswa அறக்கட்டளை மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன், UniMAP பல்கலைக் கழக மாணவர் விவகாரத் துறையின் துணை இயக்குநர் Dr Wan Safiura Wan Osman தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அண்மையில் ஷாமினேஸ்வரியை நேரில் சென்று கண்டனர்.
இலவச போக்குவரத்து, பதிவுக் கட்டண தள்ளுபடி, தங்குமிடம், பல்கலைக் கழக முன்னேற்பாட்டு உதவி என பல்வேறு ஆதரவுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவ்வுதவிகளால் நெகிழ்ச்சியடைந்த ஷாமினேஸ்வரி “வாழ்க்கை சவால்களால் நிறைந்திருந்தாலும், அறிவே எங்கள் குடும்பத்தின் மீட்சிப் பாதை என்றும், தன் பெற்றோரும், தம்பிகளும் பெருமை கொள்ளும் வகையில் தான் வெற்றிப் பெற விரும்புவதாகவும் நம்பிக்கையுடன் கூறினார்.