
புக்கிட் ஜாலில், செப்டம்பர்-27,
ஆஸ்ட்ரோ என சுருக்கமாக அழைக்கப்படும் Astro Malaysia Holdings Bhd மீண்டும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டு வருவாய் ஏமாற்றமளித்ததால், அந்த துணைக்கோள ஒளிபரப்பு நிறுவனத்தின் பங்குகள் 13 சென் வரை சரிந்து, மொத்த மதிப்பு வெறும் 679 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைந்தது.
சுமார் 8.7 மில்லியன் பங்குகள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.
ஜூலை 31-ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில், ஆஸ்ட்ரோவின் நிகர லாபம் படுமோசமாக 70% வீழ்ச்சியடைந்து 16.39 மில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே பதிவானது.
கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் அது 54.71 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
வருவாயும் 13% சரிந்து 683.21 மில்லியன் ரிங்கிட்டாகச் சுருங்கியுள்ளது.
Netflix, Disney+ Hotstar போன்ற OTT தளங்களின் கடும் போட்டி, சட்டவிரோத streaming சாதனங்கள் மற்றும் இணைய உள்ளடக்கங்களின் சவால் போக, விளம்பர வருமானமும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதே, ஆஸ்ட்ரோவின் இந்நிலைக்குக் காரணமாகும்.
இவ்வாண்டு இதுவரை அதன் பங்கு மதிப்பு 43.5% குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அது மொத்தமாக 84% வீழ்ச்சி கண்டுள்ளது.
Hong Leong முதலீட்டு வங்கி ஆஸ்ட்ரோ பங்குகளை 10 சென் என குறித்துள்ளதுடன், TA Securities தனது இலக்கு விலையை 14.5 சென் எனக் குறைத்துள்ளது.
இந்த துணைக்கோள தொலைக்காட்சி சந்தாக்களை வாடிக்கையாளர்கள் இரத்துச் செய்து, இணைய அடிப்படையிலான streaming சேவைகளுக்கு மாறும் கலாச்சாரம் தொடரும் வரையில், ஆஸ்ட்ரோவின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.