
மலாக்கா, செப்டம்பர்-28,
தமது தலைமையிலான மடானி அரசாங்கம் இஸ்லாத்துக்கு விரோதமாக செயல்படுவதாகக் கூறப்படுவதை பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
இதுபோன்ற பேச்சுகளின் மூலம், எதிர்கட்சித் தலைவர்கள் மதத்தை அரசியலுக்காக தவறாக பயன்படுத்துவதாக, மலாக்காவில் பி.கே.ஆர் கட்சியின் 27-ஆவது ரீஃபோர்மாசி ஆண்டு விழாவில் பேசிய போது, அன்வார் குற்றம் சாட்டினார்.
இஸ்லாத்தைக் கட்டிப் காப்பதாக பீற்றிக் கொள்ளும் பாஸ் கட்சி முன்பு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் இருந்த காலத்தில் சூதாட்டம் குறையவில்லை; மாறாக, சிறப்பு குலுக்கல் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்தது தான் மிச்சம் என அன்வார் சுட்டிக் காட்டினார்.
ஆனால் இன்றைய மடானி அரசாங்கமோ – இஸ்லாமிய முன்னேற்றத்திற்கான நிதியை உயர்த்தியுள்ளதோடு, Tahfiz பள்ளிகளை ஆதரித்து, Huffaz மாணவர்களுக்கு TVET எனப்படும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
மக்களின் நலனை உறுதிச் செய்வதோடு, தூய்மையான, நியாயமான ஆட்சியின் மூலம் இஸ்லாமிய மதிப்புகளை காக்கும் உறுதியுடன் தனது அரசு செயல்படும் எனவும் அவர் உறுதிக் கூறினார்.