
லாபிஸ், அக் 1 – ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான குறுக்கோட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த த.ஹவின்ராஜ் மற்றும் பெண்கள் பிரிவில் Jalan தாஜூல் தமிழ்ப் பள்ளியின் ச.சக்தீஸ்வரியும் முதல் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றனர்.
இவர்கள் இருவரும் வெற்றிப் பதக்கத்தையும் ரொக்கப் தொகையையும் பரிசாகப் பெற்றனர்.
ஆண்களுக்கான குழு பிரிவில் முதல் இடத்தை ரினி தமிழ்ப்பள்ளியும் பெண்கள் குழு பிரிவில் கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியும் வென்றன.
மேலும் இப்போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக கங்கார் பூலாய் தமிழ்ப் பள்ளி வாகைசூடியது.
இப்பிரிவில் ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தையும், லாடாங் கேலான் தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடத்தையும் , நான்காவது இடத்தை ரினி தமிழ்ப்பள்ளியும், ஐந்தாவது இடத்தை லாபிஸ் தமிழ்ப் பள்ளியும் பெற்றன.
மலேசியாவின் முன்னாள் நெடுந்தூர ஓட்டக்காரரும் பல அனைத்துலக ஓட்டப்போட்டிகளில் பதக்கங்களை வென்றவருமான டத்தோ எம். ராமச்சந்திரன் தொடக்கிவைத்த இந்த போட்டியில் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த 47 தமிழ்ப் பள்ளிகளிலிருந்து 152 மாணவர்கள் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவில் 153 மாணவிகளும் கலந்துகொண்டனர்.
Kelab Olahraga integrasi தலைவர் ஆனந்தராஜா வி.ராமன் மற்றும் அவர்தம் உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவோடு ஜோகூர் மாநில கல்வி இலாகா மற்றும் ஜோகூர் மாநில தலைமையாசிரியர் மன்றம் இப்போட்டியை இணைந்து நடத்தியது.
டத்தோ எம். ராமச்சந்திரனுடன் , ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளியின் அமைப்பாளர் இரா. இரவிச்சந்திரன், ஜோகூர் மாநில தலைமையாசிரியர் மன்றத் தலைவரும் , சா ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான க.டோமினிக் சவுரிமுத்து மற்றும் லாபிஸ் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் பெ.கோவிந்தன் பெருமாள் ஆகியோர் இப்போட்டிக்காக பலவகையிலும் ஆதரவையும் உதவியையும் வழங்கினர்.