
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-2 – செபராங் பிறை மாநகர மன்றமான MBSP நடத்திய மீன்பிடி போட்டியில் ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்தை, பினாங்கு மாநில மீன்வளத்துறை விசாரணை நடத்துகிறது
சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கத்தை MBSP-யிடமிருந்து காத்திருப்பதாகவும், அதன் பிறகே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் இயக்குநர் Zarina Zainuddin இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
பொதுக் குளங்கள் அல்லது நீர் நிலைகளில் விடுவதற்கு உள்ளூர் மீன்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன; வெளிநாட்டு மீன் இனங்களை விடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
காரணம், அது பல்லுயிர் பெருக்க சமநிலையை குலைத்து, வாழ்விடத்தை சேதப்படுத்தி, உள்ளூர் மீன் இனங்களுக்கு ஆபத்தாக மாறும் அபாயம் உள்ளது என்றார் அவர்.
அச்சம்பவம் தொடர்பாக பல தரப்பினரிமிடருந்து கண்டனமும் எழுந்துள்ளது.
போட்டி நடைபெற்ற குளம், ஜுரு நதியுடன் இணைகிறது; இதனால் குறிப்பாக மழைக்காலத்தில், இந்த வெளிநாட்டு மீன்கள் பரவி ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் என உள்ளூர் மீனவர்களும் கவலைத் தெரிவித்துள்ளனர்.