
சென்னை, அக்டோபர்-4,
தமிழகத்தின் கரூரில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான TVK கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அக்கட்சிக்கும் போலீஸுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மக்களை விட்டுவிட்டு கட்சி தலைவர்கள் தப்பிச் சென்றது கண்டிக்கத்தக்கது என நீதிமன்றம் தெரிவித்தது.
மக்களின் உயிரைக் காப்பாற்றவே கட்சி முன்னுரிமைக் கொடுத்திருக்க வேண்டும் என்ற நிலையில், கட்சியை விஜய் வழிநடத்தும் விதத்தை நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
விஜயின் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றதால் பலர் சாலைகளில் விழுந்து காயமடைந்த வீடியோக்கள் இருந்தும், “வாகனம் மோதி தப்பிச்சென்ற வழக்கு” என போலீஸ் தானாகவே வழக்குப் பதிவுச் செய்யாதது ஏன் எனவும் நீதிமன்றம் கேட்டது.
அதே சமயம், கரூர் மாவட்ட போலீஸ் நடத்திய புலனாய்வின் மீதும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், இதுவரை இரண்டு கிழ்நிலை கட்சி நிர்வாகிகள் மட்டுமே வழக்கில் சிக்கியுள்ளதை கடுமையாக சாடியது.
மேலும், பெண்களும் குழந்தைகளும் பலியாகிய நிலையில், அரசாங்கம் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சோக நிகழ்வு, அப்பாவி பொது மக்கள் உயிர் பாதுகாப்பில் கட்சித் தலைவர்களும் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்ற கடுமையான எச்சரிக்கையை வலியுறுத்துவதாகவும் நீதிமன்றம் கூறியது.