
வாஷிங்டன், அக்டோபர்-4,
காசா அமைதி ஒப்பந்த முயற்சியில் முக்கிய முன்னேற்றமாக ஹமாஸ் போராளி கும்பல், தங்களிடம் உள்ள அனைத்து இஸ்ரேலியப் பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமைக்குள் அமைதித் திட்டத்தை ஏற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹமாஸின் இவ்வறிவிப்பை வரவேற்ற ட்ரம்ப், நீடித்த அமைதிக்குத் அது தயாராக உள்ளதாக நம்புவதாகவும், எனவே காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால் இவ்விஷயத்தில் இன்னும் சவால்கள் உள்ளன.
காரணம், அமெரிக்கா வகுத்த அமைதித் திட்டத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து கூடுதல் பேச்சுவார்த்தை தேவை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
முக்கியமாக, ஆயுதங்களை கைவிட வேண்டும், காசா நிர்வாகத்தில் இனி பங்கு கொள்ளக்கூடாது போன்ற முக்கிய நிபந்தனையை ஹமாஸ் ஏற்கவில்லை.
எனவே, பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் எடுத்த முடிவு ஒரு பெரிய முன்னேற்றம் என்றாலும், நீடித்த அமைதிக்கான பாதை இன்னும் பல்வேறு சவால்களால் நிறைந்துள்ளதாக பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வேளையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும், ட்ரம்ப் முன்வைத்த 20-அம்ச அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தை உடனடியாக அமுல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.