
குவாந்தான், அக்டோபர்-7,
குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் நேற்று மாலை கனமழைக்குப் பிறகு ceiling எனப்படும் மாடிச் சுவற்றின் வழியாக மழை நீர் கசிந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வைரலான 20 வினாடி வீடியோவில், மாடிச் சுவற்றில் உள்ள மின்விளக்குகளிலிருந்து மழை நீர் சிந்தி, தரை முழுவதும் நனைந்த காட்சி தெரிகிறது.
என்றாலும், நோயாளிகள் அமைதியாக தங்கள் வரிசையில் காத்திருந்தனர்.
மாலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த மழை நீர் கசிவு மருத்துவமனையின் தரைத்தள வரவேற்பு பகுதியில் மட்டுமே காணப்பட்டது; எந்தவொரு வார்டும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பிடிமானம் இலகி ceiling சரியலாம் மற்றும் மின்சார இணைப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கவலை தெரிவித்தனர்.
பருவமழை தொடங்கியுள்ளதால் உடனடி பழுதுபார்ப்பு தேவை எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து விரிவான அறிக்கைக்குக் காத்திருப்பதாகவும், பராமரிப்பு நிறுவனம் தற்போது அங்கு ஆய்வு நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட பஹாங் ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.