
கெய்ரோ, அக்டோபர்-7,
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் தற்போது எகிப்தில் நடைபெற்று வருகின்றன.
ஹமாஸ் போராளி கும்பல்களின் பிரதிநிதிகளோடு, இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து, கட்டார் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று, போர் நிறுத்தம், பிணைக் கைதிகளின் விடுதலை மற்றும் பரிமாற்றம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
எனினும் முந்தையச் சுற்றுகளைப் போலவே, இம்முறையும் ஹமாஸ் – இஸ்ரேல் தரப்புகள் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டார்கள்.
இந்நிலையில் ஹமாஸ் சார்பில் கலீல் அல்-ஹய்யா (Khalil Al-Yahya) தலைமையிலான குழு திங்களன்று எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களைச் சந்தித்தது.
மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் இஸ்ரேலின் வியூக அமைச்சர் ரோன் டெர்மர் (Ron Dermer) உள்ளிட்ட உயர் நிலை பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.
துருக்கியே அரசாங்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்பின் திட்டத்தின் படி அமைதித் தீர்வை அடைய “திறந்த மனப்பான்மையுடன்” செயல்படுவதாக ஹமாஸ் பிரதிநிதிகள் கூறினர்.
பேச்சுவார்த்தைகள் பல நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.