10 கோடி ரிங்கிட் போதைப் பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு -நால்வர் கைது

கோலாலம்பூர் , அக் 9 –
குளியல் துவாலை பெட்டிக்குள் மறைத்து சுமார் 10 கோடி பெறுமானமுள்ள போதைப் பொருள் கடத்தும் முயற்சியை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய சுங்கத் துறை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விமான நிலைய தீர்வையற்ற பகுதியில் ஒரு விரைவு அஞ்சல் சேவை கனரக வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 21 பொட்டலங்கள் அடங்கிய கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்தனர்.
ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு கடத்தப்படவிருந்த இதனுடைய சந்தை மதிப்பு 2 கோடியே 15 லட்சத்து 9 ஆயிரம் ரிங்கிட் என்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய சுங்கத் துறை இயக்குனர் ஜூல்கிப்லி பின் முகமட் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செப்டம்பர் 29, 30 ஆம் தேதிகளில் இரவு 8.15 மனியளவில் ஷா ஆலம், சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளில் இரண்டு சரக்கு கிடங்குகளில் மேற்கொண்ட சோதனையில் 52 பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 464.58 கிலோ கிராம் எடையை கொண்ட கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் கடத்தப்படவிருந்த அதன் சந்தை மதிப்பு 4 கோடியே 55 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் என்று அவர் கூறினார்.
மேலும் இம்மாதம் 1ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முதலாவது முனையத்தில் உள்ளூர் ஆடவர் கொண்டு வந்த ஒரு பயணப் பெட்டியை சோதனையிட்டதில் மதிப்பு 20 லட்சத்து 6 ஆயிரம் ரிங்கிட் போதைப் பொருளும் இம்மாதம் 3 ஆம்தேதி மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு கடத்தப்படவிருந்த 2 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.