
சிங்கப்பூர், அக்டோபர்-11 -போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மலேசியர் பி. பன்னீர் செல்வம், தனது கடைசி கடிதத்தில் நன்றி, நம்பிக்கை, மற்றும் வாழ்வின் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்திச் சென்றுள்ளார்.
அவரது வழக்கறிஞர் தூ சிங் ஜி (Too Xing Ji) அக்டோபர் 9-ஆம் தேதி அந்த கடிதத்தை வெளியிட்டு, “இது பன்னீரின் கடைசி நன்மை செயல்களில் ஒன்று” எனக் குறிப்பிட்டார்.
கடந்த புதன்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், தானே கைப்பட எழுதி தற்போது வைரலாகியுள்ள அக்கடிதத்தில் “முடிவு நாம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் போனாலும், நாம் கண்ட பயணம் அருமையானது. மனித அனுபவங்களைப் பற்றி கற்றோம்… நம்மை நாமே ஆழமாக அறிந்தோம்” என தமக்கும் வழக்கறிஞருக்கும் இடையிலான தொடர்புகளை நெகிழ்வுடன் பன்னீர் வருணித்தார்.
அதே சமயம்,
தனது வழக்கறிஞருக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்து, “நீங்கள் அற்புதமானவர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள், இயேசு உங்களை நேசிக்கிறார்” என பன்னீர் எழுதியுள்ளார்.
பன்னீரின் கடிதத்தால் நெகிழ்ந்த வழக்கறிஞர் Too, தூக்குத் தண்டனைக்கு எதிரான அவருடையப் போராட்டத்தில் ஆறாண்டு காலம் பயணித்தது மறக்க முடியாதது என்றார்.
“சிலர் தங்கள் வாழ்நாளில் செய்ததை விட, தனது மன வலிமையால் இந்த 6 ஆண்டுகளில் பன்னீர் அதிகம் ‘சாதித்ததாக’ Too புகழாரம் சூட்டினார்.
இக்கடிதம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, மரண தண்டனையின் முன் அமைதி மற்றும் மன உறுதியின் சின்னமாக பாராட்டப்படுகிறது.
சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம், பன்னீரின் இறுதி மேல்முறையீட்டை நிராகரித்ததையடுத்து, அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.