
குவாலா லங்காட், அக்டோபர்-26,
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்காக சென்று கொண்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ஊர்வலத்தின் மீது, நான்கு சக்கர வாகனம் மோதியதில், ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் காயமடைந்தார்.
வெளிநாட்டு பேராளர்களை அழைத்துச் செல்லும் போது, அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் சென்ற Kawasaki GTR மோட்டார் சைக்கிளை, திடீரென இடப்புறத்திலிருந்து வந்த 4WD வாகனம் மோதியது.
அதில் Kawasaki சாலையில் சரிந்து சென்று விழுந்ததில், 35 வயது அந்த கார்ப்பரல் போலீஸ்காரரின் இடது கால் முறிந்து, கணுக்கால் மற்றும் முழங்காலில் காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.
விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆசியான் உச்சநிலை மாநாடு முடியும் வரை, அதிகாரப்பூர்வ வாகன convoy ஊர்வலங்களுக்கு வழிவிடும்படி அனைத்து வாகனமோட்டிகளுக்கும் போலீஸார் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



