
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26,
பினாங்கு மாநகர மன்றமான MBPP பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு வருடத்திற்கு RM1.7 மில்லியன் நிதி ஒதுக்கி, இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் நோயாளிகள், குடும்பத்தினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் வாகன நிறுத்துமிட பற்றாக்குறை பிரச்சனையைத் தணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி இந்த இலவச பேருந்து சேவை அமுலுக்கு வருமென, மாநகர மேயர் டத்தோ ஏ. ராஜேந்திரன் கூறினார்.
இதனிடையே அவ்வறிவிப்பை, செனட்டரும் சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலம் பெரிதும் வரவேற்றுள்ளார்.
பல நோயாளிகள் வலியுடனும் மனஅழுத்தத்துடனும் மருத்துவமனைக்கு வருவதாகவும், வாகன நிறுத்துமிடப் பிரச்னை அவர்களின் துயரத்தை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.
இத்திட்டம் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தும் மாநில அரசின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற மாநிலங்களும் இதுபோன்ற மனிதநேயம் மிக்க முயற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



