
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 –
சுபாங் ஜெயாவிலுள்ள வீடொன்றில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை ஒன்று, கைவிடப்பட்ட நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஜாலான் USJ பகுதியிலுள்ள ஒரு வீட்டின் அருகே குழந்தை இருக்கும் தகவல் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடனேயே, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, நீல நிற பையில் நிர்வாணமாகவும், இரத்தம் படிந்த தொப்புள் கொடியுடன் குழந்தை காணப்பட்டது.
அக்குழந்தை உடனடியாக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் எடை 2.6 கிலோவாக இருந்தது எனவும் தற்போது அவளது உடல் நலம் சீராக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.
பிறந்த குழந்தையை மறைத்து கைவிடுதல் குற்றச்சாட்டின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவத்தைப் பற்றிய கூடுதல் தகவல் அறிந்தவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக காவல்துறையினரை தொடர்புக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.



